பாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு
மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட உள்ளது.
மோசமான உணவு, அதிக பணி நேரம், உயர் அதிகாரிகளின் இரக்கமற்ற தன்மை, குறைந்த ஊதியம் என மத்திய பாதுகாப்புப்படை வீரர்களின் பிரச்சினைப் பட்டியல் நீளத் தொடங்கி உள்ளது. இந்தப் பிரச்சினைகளை சில வீரர்கள் ஒளிபடக் காட்சிகள் (வீடியோ) மூலம் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களின் குறைகளை ஆராய ஒரு உயர்நிலைக்குழு அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் வீரர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் சமூக இணையதளங்களில் வெளியிட்ட வீடியோ காட்சிகளால் மத்திய அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. வீரர்கள் தெரிவித்துள்ள குறைகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
எனவே, வீரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் குளிர், பனிப்பிரதேசம் மற்றும் கரடுமுரடான பகுதிகள், ஆபத்துமிக்க பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படைகளின் ஏழு பிரிவுகளின் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்” என்றனர்.
குளிர் பிரதேசம் உட்பட கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இப்போது அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சலுகையாகக் கிடைத்து வருகிறது. ஆனால், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை(சிஐஎஸ்எப்), சஹஸ்தரா சீமா பல் (எஸ்எஸ்பி), இந்தோ திபெத்தியன் எல்லை படை(ஐடிபிபி), தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) மற்றும் அசாம் ரைபில்ஸ் (எஆர்) ஆகிய ஏழு படை வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை.
எனவே, தங்களுக்கும் ராணுவ வீரர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, சிஆர்பிஎப் வீரர்களுக்கு பல சிறப்புச் சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை செய்துள்ள போதிலும், அவற்றை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதுகாப்புப் படை வீரர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது பலராலும் வரவேற்கப்படும் எனக் கருதப்படுகிறது. இதற்காக, சில மத்திய அமைச்சகங்களும் தங்களால் முடிந்த சலுகைகளை வீரர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன. உதாரணமாக, தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு செல்போன் கட்டணங்களில் சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.