தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன?- 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேசிய கீதம், தேசிய பாடல் தொடர்பான மத்திய அரசின் கொள்கை குறித்து 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கேரளாவைச் சேர்ந்த கொடுங்கல்லூர் திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்லா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரிகளில் ‘ஜன கன மன’ தேசிய கீதம், ‘வந்தே மாதம்’ தேசிய பாடல் இசைக்கப்படுவது குறித்த மத்திய அரசின் கொள்கை குறித்து 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், ஆட்டிசம், தொழுநோய், பார்க்கின்சம், போலியோ, காது கேளாதோர், பார்வையற்றோர் உள்ளிட்டோர் திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
திரையரங்கில் தேசிய கீதம் இசைப்பதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தேசிய கீதம், தேசிய பாடலுக்கு மரியாதை அளிப்பது அவரவர் கடமை. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Keywords: தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன, 4 வாரங்களில் பதிலளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவு