பாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்
எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சாகர் தலை துண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக 50 தலைகளை இந்திய வீரர்கள் கொண்டு வர வேண்டும் என அவரது மகள் சரோஜ் ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மெத்தன போக்கை கடைபிடிப்பதால், இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
‘‘பாகிஸ்தான் விவகாரத்தில் அரசு உரிய முறையில் செயல்படவில்லை. இந்த கொடூர செயலுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும். நாட்டுக்காக எனது சகோதரர் உயிர் தியாகம் செய்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். அதே சமயம் பாகிஸ்தான் ராணுவம் அவரது தலையை துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை’’ என சகோதரர் தயாசங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மற்றொரு வீரரான பரம்ஜீத் சிங்கின் உடல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தார்ன் தரனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலும் மோசமாக சிதைக்கப்பட்டதால் சவப்பெட்டியில் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் துயரம் அடங்காத அவரது உறவினர்கள் உடலை பார்க்க அனுமதித்தால் மட்டுமே தகனம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.