அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மக்கள் சீனாவுடன் இணைவதை விரும்புகின்றனர்: சீன நாளிதழ் செய்தி வெளியீடு
பிடிஐ
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதி மக்கள் இந்தியாவின் ‘சட்டவிரோத’ ஆட்சியில் கடும் கடினப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதனால் சீனாவுடன் இணைவதை விரும்புவதாகவும் சீன அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு பவுத்தத் துறவி தலாய் லாமா வருகை தந்ததற்கு இந்தியாவை கடுமையாக சாடிவந்தது சீனா. குறிப்பாக சீனா தெற்கு திபெத் என்று கருதும் தவாங் பகுதிக்கு தலாய்லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் சீன அரசு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் சட்டவிரோத ஆட்சியில் தெற்கு திபெத் மக்கள் பல கடினங்களையும் பல்வேறு பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர். இதனால் சீனாவுடன் இணைய விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால் திபெத்தில் சீனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களையும் சீன கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக 120 பேர் தற்கொலை செய்து கொண்டதையும் இந்த செய்தி சவுகரியமாக மறைத்து எழுதப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கட்டுரையில், “தலாய் லாமாவின் வருகை தனக்குத் தானே துரோகம் இழைக்கும் செயல் என்பதோடு, திபெத் மக்களுக்கும் இழைக்கும் துரோகச் செயலாகும்.
தன் வாழ்க்கைக்கு இந்தியாவை நம்பியிருக்கும் தலாய்லாமா தன்னுடைய ஆண்டானுக்கு (இந்தியா) விசுவாசமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தெற்கு திபெத்தை விற்பதற்கு அவர் நிறைய செய்து விட்டார். அதாவது தன் ஆண்டானை திருப்தி செய்வதற்கு அவர் இந்த நன்றியுணர்ச்சியைக் காட்டி வருகிறார்.
மேலும் தலாய் லாமா பொது வெளியில் தான் ‘இந்தியாவின் புதல்வன்’என்று 20 தடவைக்கும் மேலாகக் கூறியிருக்கிறார். எனவே இம்முறை தனது இந்த அடையாளத்தை நிலை நிறுத்த தன் ஆண்டானுக்கு தெற்கு திபெத்தை விற்க ஏற்பாடு செய்து வருகிறார். இந்திய-சீன எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தலாய்லாமா இடையூறாக இருக்கிறார் என்பது புரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுடையது என்பதற்கு ஆதாரமாக வரலாற்று நிகழ்வுகளை இந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசம் சீனாவிடமிருந்து மெக்மோகன் கோடு மூலம் பிரிக்கப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளியுறவு செயலர் ஹென்றி மெக்மஹோன் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் முன்மொழிவு செய்தது இது. ஆனால் அந்த ஒப்பந்தம் ஒருபோதும் செல்லுபடியானதாகக் கருதப்படவில்லை, என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கோடு இந்திய-சீன எல்லையாகும். இதனை திபெத்தியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், ஆனால் சீன அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.