ஜாதவ்வுக்கு மரண தண்டனை நிறைவேற்றினால் இருதரப்பு உறவுகள் சேதமடையும்: பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை
பிடிஐ
குல்பூஷன் ஜாதவ்வுகு மரண தண்டனை நிறைவேற்றினால் அது ‘முன்கூட்டியே திட்டமிட்ட கொலை’ என்றே பார்க்கப்படும் எனவே பாகிஸ்தான் இதன் விளைவுகள் இருதரப்பு உறவுகளில் ஏற்படுத்தும் சேதங்களை கருத்தில் கொள்வது நல்லது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரித்துள்ளார்.
“ஜாதவ் தவறான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊட்டிவளர்க்கிறது என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வரும் நிலையில் பன்னாட்டு கவனத்தைத் திருப்புவதற்காக இந்தியா மீது அவதூறு கற்பிக்கும் நோக்கத்திற்கான பாகிஸ்தான் திட்டத்திற்கு ஜாதவ் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது முன் தீர்மானிக்கப்பட்ட மரணம் என்றே நாங்கள் முடிவுகட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சட்டத்தின், நீதியின் பன்னாட்டு உறவுகளின் அடிப்படை நடைமுறைகளை மீறியதாகவும் இந்தியக் குடிமகன் ஒருவர் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார் என்றே இந்திய மக்கள் இதனைக் காண்கிறார்கள் என்று நான் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதில் மேலும் தீவிரம் காட்டினால் இருதரப்பு உறவுகளில் இது கடும் விரிசலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.
மரண தண்டனை விதிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கையாண்ட சட்ட நடைமுறைகள் கடத்தப்பட்ட அப்பாவி இந்தியர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் அவர் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியது இந்த ஒட்டுமொத்த நடைமுறையையும் கேலிக்கூத்து என்பதை எங்களுக்கு அறிவுறுத்துகிறது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வாய்ந்த வழக்கறிஞர்கள் உதவி ஜாதவ்வுக்கு உண்டு என்பதோடு பாகிஸ்தான் அதிபரிடத்திலும் இதனை எடுத்துச் செல்வோம். என்ன தேவையோ அதனைச் செய்வோம். ஜாதவ் அவரது பெற்றொருக்கும் மட்டும் மகனல்ல இந்தியாவின் மகனும் கூட.
ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார் ஜாதவ், அவர் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார். சரியான சூழல் என்னவென்பது தெளிவாக இல்லை. தூதரக ரீதியாக அவரை அணுகும் போதுதான் இது குறித்த தெளிவு கிடைக்கும்” என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.