ஜாதவ் மரண தண்டனை விதிப்பு சட்ட ரீதியாக கேள்விக்குரியதே: உளவுத்துறையினர் ஐயம்
சிறப்புச் செய்தியாளர் HINDU TAMIL
இந்திய கப்பற்படை முன்னாள் கமாண்டர் குல்பூஷன் ஜாதவ்வுக்கு விதித்த மரண தண்டனை ராணுவச் சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட உத்தரவாகும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய உளவுத்துறையினர் பலரும் சட்ட ரீதியாக ஜாதவ் மரண தண்டனை விதிப்பு கேள்விக்குரியதே என்று கூறியுள்ளனர்.
இது குறித்து முன்னாள் உளவுத்துறை தலைவர் கூறும்போது, “அரசு தரப்பில் இந்த மரண தண்டனை குறித்து கேள்வி எழுப்ப முடியும்” என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தான் தனது ராணுவச் சட்டத்தில் சர்ச்சைக்குரிய திருத்தங்களை மேற்கொண்ட பிறகு ஜாதவ் மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தங்களின் படி சிவிலியன்களும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராணுவ நீதிமன்ற ரகசிய விசாரணைக்குட் பட்டவர்களாவர். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 160 பேர் இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, “இது சட்டரீதியாக செல்லுபடியாகாததே. இதே சட்டத்திருத்தத்தை ஆயுதம் ஏந்தாத அயல்நாட்டவருக்கும் எப்படி அவர்கள் செயல்படுத்த முடியும்? அதுவும் ஜாதவ் யார் என்பது நன்றாகவே தெரிந்த பிறகு?” என்றார் மற்றொரு அதிகாரி.
ஓய்வு பெற்ற மற்றொரு உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியர் ஒருவரை ராணுவ கோர்ட் ஒன்று இவ்வாறு தண்டனை அளித்த இன்னொரு சம்பவத்தை என்னால் நினைவுகூற முடியவில்லை. பாகிஸ்தானி சிவில் நீதிமன்றங்கள் வேவு பார்த்த வழக்கில் இந்தியர்களை கைது செய்திருக்கின்றனர்” என்றார்.
இன்னொரு ஓய்வு பெற்ற அதிகாரி கூறும்போது, “இது நமக்கு நல்ல செய்தியல்ல. ஜாதவ் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி. அதைத்தவிர நமக்கு வேறு எதுவும் தெரியாது” என்றார்.
ஜாதவ் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் 1987-ம் ஆண்டு சேர்ந்தார். கப்பற்படையில் இவர் 1991-ம் ஆண்டு இணைந்தார். 2001-ல் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஜாதவ் மரண தண்டனை செல்லாது விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றே கப்பற்படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஜாதவ்வின் பாஸ்போர்ட் ஹுசைன் முபாரக் படேல் என்ற அவரது மாற்றுப்பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.